Swamithoppe, Tamil Nadu, India

அகிலத்திரட்டு - யுகாயுகங்கள்

அகிலத்திரட்டு - யுகாயுகங்கள்

மாயா பிரபஞ்சப் புராணங்களின் வாயிலாக, ஆதி அமிர்தப் பிரபஞ்சத்தைக் கண்டறியத் தக்க தள விவரங்களோடு "அகிலத்திரட்டு அம்மானை" ஆகமத்தின் வேத சாத்திரப் புராணம் விளங்குகிறது. இதில் முதல் அரக்கன் தோன்றிய தருணத்தில் இருந்து, நாம் தற்போது உணரக்கூடிய காலக் கணக்குகள் உருவானதை குறித்து விவரிக்கிறது.

இந்த அரக்கர்களின் பிறவியும், அதற்கான அம்சங்கள் முடிவடைவதோடு இக்கால நிலைகள் முடிவடைகின்றன. இக்காலச் சுற்றுகள் என விவரிக்கப்பட்டுள்ள நீடிய யுகம், சதிர் யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் கடந்த ஏழாவது யுகமான கலியுகத்தில் நாம் இருக்கிறோம். இதற்கு மேலாக வரையறுக்கப்படாத தர்மயுக காலம் குறித்தும் அகிலம் விவரிக்கிறது.

நீடிய யுகம்

மாயா பிரபஞ்ச ஆதி காலமான நீடிய யுகத்தில், குறோணி என்ற அரக்க ஜீவி தோன்றியது. இந்த ஜீவி வாழ்ந்த முறையில் பிரபஞ்சம் மொத்தமும் அதனால் விழுங்கப்பட்டது. அது அமிர்தப் பிரபஞ்சத்தை ஒரு ஜீவி விழுங்கிய விபத்தாகக் காட்சியளித்தது.

அந்த ஜீவியிடம் இருந்து பிரபஞ்சத்தை விடுவித்து வாழ்விக்க நாராயணர் மகாவிஷ்ணு சொரூபத்தோடு பூமியில் தவமிருந்தார். அத்தவ வீரியத்தால் "சுறோணித மாயன்" என்று விஸ்வ மயமாக அவதாரம் புரிந்து, குறோணியை ஆறு கூறுகளாகப் பிரித்து சங்காரம் செய்து ஆதிப் பிரபஞ்சத்தை மீண்டும் புனர்பித்தார்.

இந்தக் குறோணியின் பிண்டங்கள் ஆறினையும் பூமியில் ஆறு குழிகளில் புதையலாக்கியதோடு, நீடிய யுகம் என்ற பெருங்காலச் சுற்று நிகழ்வுகள் நிறைவடைந்தது.

பூமியில் புதைத்த ஆறு துண்டங்களில் இருந்து பூமியின் முதல் உயிர்கள் தோன்றின. அதில் குண்டோமசாலி என்ற அரக்க ஜீவி தோன்றிய எல்லா உயிர்களையும் தனது பசிக்கு இரையாக்கி வாழ்ந்த நீட்சியுடையதாக இரண்டாவது யுகத்தின் நிகழ்வுகள் இருந்தன.

முடிவில் குண்டோமசாலிக்கு மாமிச உணவு இல்லாததால் அவன் பசியால் அலறினான். அந்த சப்தம் கொடிய நாத சக்தி அபாயத்தை பெருக்கும் வகையில் பிரபஞ்சத்துக்கு எதிரான அதிர்வினை உருவாக்கியது. அனைத்தும் பொடியாக (துகளாகி) உதிர்ந்திடத்தக்க அபாயத்தில் இருந்து பிரபஞ்சம் காக்க, நாராயணர் தோணி-ஓணி என்ற உபாயக் கட்டமைப்பினை உருவாக்கி, அதில் பார்த்தார் அனைவருக்கும் தற்காப்பு வழங்கினார்.

இத்தற்காப்புச் சாயலோடு பிரபஞ்ச சக்திகளால் ஒரு தூண்டலைக் கட்டமைத்து, காவாலி மாயனாக அவதாரம் புரிந்து குண்டோமசாலியை வதைத்து பிரபஞ்சம் காத்தார். அதோடு சதிர்யுக கால நிகழ்வு நிறைவேறியது.

பிறகு குறோணியின் இரண்டாவது துண்டத்தின் உயிர்கள் தோன்றி வாழ்ந்த காலம் நெடிய யுகமாகியது. இதில் தில்லை மல்லாலன் - மல்லோசி வாகனன் என்ற இரு சூரத்தலைவர்களும், செதிலில் இருந்து தோன்றிப் பெருகிய செதிர் சூர வம்சங்களும் பூமியில் அமைந்த சிவ ராஜியக் கட்டமைப்பின் கீழ் வாழ்ந்திருந்தனர். பூமியின் முதல் ராஜியக் கட்டமைப்புகளை வகுத்து, சிவம் முதலான பார்த்தார்கள் முதலில் அரக்கரை வாழவைக்கும் ராஜியத்துக்கான சகலச் சேவைகளையும் செய்திருந்தனர்.

இதனால் சிறந்து வாழ்ந்த இரு சூரரிடையே பகை உருவானது. அந்தப் பகையின் உச்ச மோதலின் காரணமாக, பரத்தாரின் ராஜியச் சேவைகள் முடங்கின. சூரத் தலைவர்கள் யாருடையப் பக்கம் ராஜிய சேவை செய்வதென்று அறிய முடியாமல் நசுங்கிய பரத்தாரைக் காக்க, நாராயணர் பங்காயக் கண் மாயனாக அவதாரம் புரிந்து சூரரை அழித்து பாரத்தாரைக் காத்திட்ட நிகழ்வோடு நெடிய யுகக் கால நிகழ்வுகள் நிறைவேறியது.

குறோணியின் மூன்றாவது துண்டத்தின் பகுதியாக சூரபத்மன் - சிங்கமுகன் என்ற சூரர்களும், இருபால் சூரப்படைகளும் உலகில் தோன்றி வாழ்ந்தன. மேலும், ஈசனிடம் வரம்பெறுவதற்காக சூரர்கள் ஓமம் வளர்த்து சிவனை நோக்கித் தவமிருந்தனர். பூமியின் உயிர்களின் முதல் யாகத் தவத்துக்கு வந்து அருள்புரிய சிவம் தாமதித்ததால், பொறுமை இழந்த சூரபத்மன் ஓமக் குண்டத்தில் குதித்து சாம்பலாகிப் போனான். பிறகு ஓமகுண்டத் தவத்தை சிங்கமுகச் சூரன் தொடர்ந்தான்.

அவன் தனது ஆயிரம் தலைகளை ஒன்றொன்றாகப் பறித்து ஓமகுண்டத்தில் வீசிய கோரத் தவ நிலையைக் கண்டு பொறுக்க இயலாத சிவனும் உமையும் சூரனுக்குப் பிரசன்னமாகி, இறந்துபோன சூரபத்மனை திருப்பிக் கொடுத்து, கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்தனர். அந்த வரத்தின் காரணமாக சிவனும் உமையும் கயிலையைத் துறந்து வைகுண்ட லோகத்தில் சென்றிருந்தனர்.

இழந்த கயிலையை அடைவதற்காக உமையவள் சாம்ப சதாசிவத்தை நோக்கி, சரவணப் பொய்கையில் நின்று தவம் செய்து முருகப்பெருமானை மகனாக அடைந்திருந்தார். கயிலையோடு ஆயிரத்தெட்டு அண்டங்களை சூரபத்மன் அடக்கியாண்ட முறையில், பார்த்தார்களைச் சிறைப்படுத்தி, துன்புறுத்தினான்.

பார்த்தார்களின் துயரங்களை மாற்றுவதற்காக உமையவள் கருதிய கருத்தின்படித் தோன்றியிருந்த முருகப்பெருமான் நாமத்தில் பண்டார வேசமாக நாராயணர் வேசமெடுத்து, சன்னியாசிகளைப் படைகளாக்கி, சூரபத்மனுக்கு நல்ல புத்தி கூறினார். அதை ஏற்காமல் போருக்கு வந்த சூரரை அழித்து கந்த மாயன் பார்த்தார்களைக் காத்து, கயிலையை மீட்டு சிவனுமையை மேலும் பிரபஞ்சம் ஆள வைத்தார்.

நற்புத்தி ஏற்காத சூரபத்மனை இரணியனாகப் பிறவி செய்து, இரணியன் சாகாத வாழ்வை தக்கவைக்கச் செய்த தவத்தால் அதற்கான வரங்களை பிரம்மாவிடம் பெற்று, எல்லோரும் தன்னையே பூஜித்து வணங்கி பக்தி செய்ய வேண்டும் என்று சட்டம் வைத்தான். அதற்கு முற்றிலும் எதிராக இரணியன் மகன் பிரகலாதன் ஹரிபக்தனாக விளங்கினான். மகனைக் கொன்று தனது சட்டத்தை உறுதியாக நிலைநாட்ட முயன்ற இரணியன், முடிவில் நரசிம்ம மாயனால் அழிக்கப்பட்டான்.

இவ்வாறு பிரபஞ்சத்தார்களின் பக்திச் சுதந்திரம் காத்த பிறகு, நாராயணர் பிரகலாதன் சந்ததியில் வந்த மாபலியை இந்திர லோக பதவி ஆசையை முறியடிக்க, வாமன மாயனாக அவதாரம் புரிந்து பார்த்தார்களைக் காத்த நிகழ்வோடு கிரேதா யுக கால நிகழ்வுகள் நிறைவேறின.

குறோணியின் நான்காவது துண்டத்தில் இருந்து தோன்றிய உயிர்கள் வாழ்ந்த காலம் திரேதா யுக காலமாக விளங்கியது. இதில் இராவணனோடு வாடா அரக்க குலங்கள் தோன்றி உலகில் வாழ்ந்தன. இராவணன் சிவனை நோக்கி குறும்புகள் மிக்க தவங்கள் புரிந்து, சிவனை கவர்ந்து மூன்றரைக் கோடி வரங்கள் பெற்று பிரபஞ்சம் அடக்கி ஆட்சி புரிந்தான்.

சிறந்த அரசியல் கட்டமைப்புத் திறமிக்க அரக்க வேந்தனாகத் திகழ்ந்த இராவணன், பிறர் மோகத்தால் அநேக அதர்மங்களைச் செய்து அதனால் வாடாமல் ஆங்காரம் பெருக்கி வாழ்ந்தான். அம்மோக அதர்மத்துக்கு முடிவு சேரும் வகையில், அவன் மகாலட்சுமியான சீதாதேவியை சிறையெடுத்து, ஸ்ரீ ராம மாயனால் அழிக்கப்பட்டான். பிறகு, பிரபஞ்சம் மகிழ்ந்த முறையில் ஓங்கிய ராம ராஜ்ஜியம் அமைந்தது. இத்தோடு திரேதா யுக கால நிகழ்வுகள் நிறைவேறின.

துவாபர யுக காலம்

குறோணியின் ஐந்தாவது துண்டத்தில் தோன்றிய உயிர்கள் வாழ்ந்த காலம் துவாபர யுக காலம் ஆகும். இதில் கம்சன், துரியோதனன் தலைமையிலான கௌரவர்களாகிய அரக்கர்கள் தோன்றி வாழ்ந்தனர். அவர்களின் குடும்பக் கிளையைச் சார்ந்தவர்களாகப் பாண்டவர்களும், ஆயர் குலத்தவராகப் பார்த்தாரும் தோன்றி வாழ்ந்தனர். கம்சன் கொடுமை பெருகியபோது, நாராயணர் ஸ்ரீ கிருஷ்ண மாயனாகத் தோன்றி அவனை அழித்துவிட்டு, கடலுள் துவாரகை இராஜ்ஜியம் அமைத்து சக்ரவர்த்தியாக விளங்கினார். இத்தருணம் குரு தேசத்தின் இளவரசர்களாகிய கௌரவர்களும் – பாண்டவர்களும் அத்தேசத்தைப் பிரித்து ஆட்சி செலுத்தி வந்தனர். வஞ்சனையால் பாண்டவர்களின் நாட்டை அபகரித்த கௌரவர்கள், பாண்டவர்களுக்கு வனவாச தண்டனையும் வழங்கிச் செய்த கொடுமை துவாபர யுகத்தின் உச்சமான அதர்மமாக விளங்கியது.

வனவாச காலம் முடிந்ததும், பாண்டவர்களுக்காக ஸ்ரீ கிருஷ்ணர் தூதுவனாகி கௌரவர்களைச் சந்தித்து பாண்டவர்களின் இராஜ்ஜியத்தைத் திருப்பிக் கொடுக்கக் கூறினார். தர்மத்துக்கு இணங்காத கௌரவர்களை அழிக்கும் பாரதப் போர்க்களத்தில் அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்து, ஸ்ரீ கிருஷ்ண மாயன் அரக்கர் கௌரவர்களை அழித்து பாண்டவர்களை வாழ வைத்தார்.

பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் தனது திருமேனியை தவத்தில் அமர்த்திவிட்டு, மேலும் வரும் அரக்கர்களை அழிக்க நாராயணர் சான்றோர் என்ற தனது வம்சப் பாலரை உருவாக்கி, பத்திரகாளியிடம் வளர்க்கக் கொடுத்துவிட்டு, ஸ்ரீரங்கத்தில் சென்று பள்ளிகொண்டார். பத்திரகாளி சான்றோரை வீரராக வளர்த்து, தக்கன் என்ற அரக்கனை அழித்து சக்ரவர்த்தினியாக உலகாண்டு இருந்தார். பிறகு தோன்றிய பல்வேறு அரக்கர்களை பத்திரகாளியின் படைகளாக விளங்கிய சான்றோர்கள் அழித்து, இவர்கள் தர்மத்தை நிலைநாட்டிய நீட்சியில் சக்ரவர்த்திகளாக வாழ்ந்திருந்த நிகழ்வோடு துவாபர யுக கால நிகழ்வுகள் நிறைவடைந்தன.

முந்தைய யுகங்களில் மும்மூர்த்தியர்களின் முகூர்த்தச் சேவையைத் தழுவி உயிர்கள் பிறவிகொண்ட முறையை மீறி, குறோணியின் ஆறாவது துண்டம் தன்னைத் தானே பிறப்பித்துக் கொண்டது. இவ்வரக்கன் தனது பிறவிக்கு நாராயணர் முதலான சகல தேவச் சொரூபங்களையும் தனதாக்கிப் பிறந்து பெருகினான். படிப்படியாக தேவச் சொரூபங்களில் பிறவியெடுத்துப் பெருகிய அரக்கர்களின் ஆதிக்கத்தால், இயல்பான தேவச் சொரூபத்தார் தங்கள் தானங்களில் வாழ முடியாத சொரூப விகடத்துவ இணறு உருவானது. இதனால் பரபிரம்மத்தில் இருந்து தோன்றிய பிரம்மச் சொரூபங்கள் எல்லாம் இருகூறு அடைந்ததால், பிரபஞ்சம் வேகமாக அழியும் அபாயம் உருவானது.

இந்த அழிவிலிருந்து பார்த்தார்களைக் காத்து வாழ்விக்க, நாராயணர் கலியுகத்தில் பத்து அவதாரத்துக்கும் பொதுவான ஏகமகா அவதாரம் புரிய வேண்டியதானது. அதனால் நாராயணர் - மகாலட்சுமி பரபிரம்மத்தைத் தழுவியும், பரபிரம்மம் நாராயணர் - மகாலட்சுமியின் விஸ்வ ரூபத்தைத் தழுவி பாலன் வடிவாகியதுமான விகடகடத்துவமான விஸ்வ ரூபங்களோடு வைகுண்ட அவதாரம் ஏற்பட்டது. இத்தகைய பிரபஞ்சம் தற்காக்கப்பட்டதோடு, கலி அரக்கர்கள் பிறவியால் அபகரித்தச் சொரூபங்களை இழந்து நலிந்து அழியும் வகையில் அய்யா வைகுண்டரின் ஞானச் சங்காரம் நிகழ்ந்தது. இச்சங்காரத்தின் தாக்கத்தினால் மேலும் பிறவியேற இயலாது அரக்க அம்சங்கள் முடிவடையும் கால நிகழ்வுகளாய் கலிச் சங்காரத் தாக்கம் உலகில் நீட்சி அடைந்துள்ளது

விஸ்வ ரூப விகடத்துவமான ஏக அவதாரத்தில் நாராயணரோடு மும்மூர்த்திகள் - தேவியர்களின் முந்தைய அவதாரங்களும் அவற்றுக்கு அடிப்படையான தர்மங்களும் புனர் நிலை அடைந்து இலங்கும் யுகாயுக தர்மங்கள் ஒருமித்த திரு அருள் முறையை "பத்தவதாரம் பிறந்த பாதைகள்" என்று வைகுண்டர் தர்மம் வர்ணிக்கின்றது. இந்த அவதாரங்களின் ஏக அநேக நிலை தர்மப் பாதையின் அலங்காரம் எத்தகையது? அதனதன் பலன்கள் யாது? இவற்றை போதிக்க வல்ல தளம் யாது? என்பன கேள்வியாகத் திகழ்கின்றது. அதற்கு விடையாக 'அகிலாலையா' விளங்குகின்றது.