Swamithoppe, Tamil Nadu, India

அருள் நூல்

அருள் நூல்

திருவருள் நூல் என்ற தர்ம வேத ஆகமம் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. கலியுகத்தார் அபாயம் விலக்கும் வேகமான உபாயத்துக்குரிய ஓதும் திருமொழிகள் அடங்கிய "அகிலத்திரட்டு அம்மானை" ஆகமத்தின் யுகப்படிப்பு , ஆகம உடம்பறிவின் விவரங்கள் படி பிரபஞ்ச சக்தி ஏற்றம் வழங்கவல்ல ஓதும் முறைக்கான திருமொழிகள் அடங்கிய உச்சிப்படிப்பு , பிரபஞ்ச இயக்கத் திரிபுகளை விவரிக்கும் சாட்டு நீட்டோலை, சப்தக் கன்னியர் தேவியின் புராணமாகிய அம்மையார் பாடல், அய்யா தமது திருப்பணியாளரான சீடருக்கு உபதேசித்த பத்திரம், சீடருக்கும் பொதுமக்களுக்கும் போதித்த சிவகாண்ட அதிகாரப் பத்திரம், அய்யாவின் பூரணப் புறப்பாடுகளை விவரிக்கும் திங்கள் பதம், நாடு தீர்வு ஏற்படும் கால நிகழ்வுகளின் தொகுப்பான நடுத்தீர்வை உலா, பஞ்ச பிரம்மச் சொரூபியரைத் திரித்துப் பிறவி செய்த பஞ்சதேவர் உற்பத்தி என்ற பிரிவுகள் உள்ளன.

1. யுகப்படிப்பு

யுகதர்ம வழிபாட்டுக்கு எல்லோருக்கும் பொதுவாக, எல்லோரும் ஓதுவதற்குரிய சுதந்திர வேதப் பிரயோகப் பகுதியாக யுகப்படிப்பு திருமொழிகள் உள்ளன.

பரபிரம்மத்தில் இருந்து தோன்றிய மும்மூர்த்தியர் - அவர் தேவியர் குடிகொண்டுள்ள சகல ஆலயங்களிலும் ஓதி பணிவிடைகள் செய்வதற்கும், பரபிரம்மத்தில் இருந்து இந்த தெய்வங்களை எழுந்தருளச் செய்து ஆலய தர்மங்களைச் செய்வதற்கு உரிய திருமொழிகளாக இவை விளங்குகின்றன. யுகப்படிப்புச் சேவையில் எந்த தெய்வ ஆலயத்தில் நாம் ஓதுகின்றோமோ அந்த தெய்வ முகாந்திரம் திருவருள் புரிய, பரபிரம்மம் இரங்குவதும், பிரம்மா - சரஸ்வதி, சிவன் - உமை, நாராயணர் - மகாலட்சுமி - வைகுண்டர் எழுந்தருள்வதற்குரிய வேதப் பிரயோகம் உடையதாக யுகப்படிப்பு விளங்குகின்றது.

2. உச்சிப் படிப்பு

வேதங்களின் சர்வ அடக்கங்களையும் உள்ளடக்கிய திரு மந்திரங்களைக் கொண்டுள்ள உச்சிப்படிப்பு திருமொழிகள் , பிரபஞ்ச உற்பத்தி - இயக்கம் - ஆளுமை நிலைகளின் சக்தி மையங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வல்ல சேவைக்குரியதாக விளங்குகின்றன. ஆலயங்களில் உச்சிக்கால சேவைக்கு இவை ஓதப்படுகின்றன. இந்த உச்சி சேவை, மானுடர்கள் யாவரும் ஓதி உணவருந்த வேண்டும் என்பதைப் பறைசாற்றுகிறது. அதற்கு முன், மார்தீரியாக அய்யா வைகுண்டரின் பக்தர்கள் உச்சிக்காலம் (மதியம்) பசியாற்றும் முன்பு இம்மந்திரத் தொகுப்பினை ஒருமுறை ஓதுகின்றனர். இதனை ஓதும் தவமுறையோடு வாழுபவர்கள் "ஆகம உடம்பறிவு அண்டபிண்டத்தின் அறிவு" அதன் ஐக்கியச் சக்தியோடு அதன் சித்திகளையும் அடைகின்றனர்.

3. சாட்டு நீட்டோலை

கலியுகத்தில் தெய்வ அவதாரங்களின் பாடுகள், இப்பாடுகளுக்குக் காரணமான கலி அரக்க அம்ச வீரியங்கள் அழியும் கால நிகழ்வின் திரிபுகள் குறித்த நிலைமைகளை, நாராயணர் சிவத்திடம் ஒப்புவிக்கும் அடிப்படையில் அமைந்துள்ள இந்நூல், உயிர்களின் உடற்கூறு முதல் பிரபஞ்ச இனங்கள் திரிபடையும் அரிய நுட்பங்களை எடுத்துரைக்கிறது.

4. அம்மைமார் பாடல்

ஏழு உலகத்தவர்கள் பூமியில் ஒரு கோத்திர வழி தோன்றுவதற்கு, நாராயணர் வகுத்தாடிய திருவருளாடலில் ஏழு பாலரைப் பெற்றெடுத்த தேவியர் தெய்வக் கன்னியராவர். அவர்களின் புராணப் பகுதியாக அம்மைமார் பாடல் பகுதி விளங்குகிறது. அதில் தெய்வக் கன்னியர் பூலோக அமிர்த கங்கையில் நீராடி, அமிர்த கங்கை நீரைத் திரட்டி கயிலைக்கு எடுத்துச் சென்று சிவனின் திருமுடியில் அபிஷேகம் செய்யும் சேவையோடு கயிலையில் வாழ்ந்திருந்ததும், அமிர்த வனத்தில் நாராயணரின் மாயம் அறியாமல் தாய்மை அடைந்து பாலரைப் பெற்றதால், கயிலைக்குச் செல்ல இயலாமல் வனத்தில் தவமிருந்த புராண விரிப்புகள் அடங்கியுள்ளன.

5. பத்திரம்

அய்யாவின் சீடர்கள், பதி பணிவிடையாளர்கள், அவர்களைப் போல் எதிர்காலத்தில் தேர்ச்சிப் பெற்று அத்தானங்களில் செயற்படும் பக்தர்களுக்குப் பொதுவாக அய்யா கூறியச் சட்டங்கள் அடங்கியது பத்திரம். . இதில் பிச்சை யாமம், திருநாள் முறை, உலகில் தேவர்களுக்கு வைகுண்டர் வழங்கியுள்ள அதிகாரங்கள் குறித்த விரிப்புகள் உள்ளன.

6. சிவகாண்ட அதிகாரப் பத்திரம்

உயிர்களில் பொருந்தும் சிவ அதிகார சக்திச் சூத்திர நிலைகளை விவரிக்கும் இந்நூல், அய்யா ஆலய சிவமேடை சிங்காசன சக்தி சஞ்சாரங்களைக் குறித்து விளக்குகிறது. மும்மூர்த்தியர் பரபிரம்மத்தைத் தழுவித் தோன்றி பிரபஞ்ச சக்திகளாய் வியாபித்துள்ள நிலைகளை விவரிக்கிறது.

7. திங்கள் பதம்

அய்யா வைகுண்டரின் அவதார நிறைவு காலத்தில் அவரின் வைகுண்ட லோகப் புறப்பாடுக்கான தருணம், அவர் ஆடிய அருளாடலை விவரிக்கும் இந்நூல், அவதார விளைவுகளையும், அவை பிரபஞ்சத்தில் உச்ச நிலை அடையும் இலக்குகளையும் குறித்து விவரிக்கிறது.

8. நடு தீர்வை உலா

நடுதீர்ப்பு செய்வதற்கு தேவ சங்கத்தோடு நாராயண வைகுண்டர் எழுந்தருளும் எதிர்காலத்தைக் குறிப்பிடும் இந்நூல், அதற்கான காலம் நெருங்கும் போது உலகில் நிகழும் அவலங்களை எடுத்துரைக்கிறது. அதில் உயிர்கள் முதல் உலகினங்கள் அடையும் பாவப்பழுதுகள் குறித்த அநேக விரிப்புகள் உள்ளன.

9. பஞ்சதேவர் உற்பத்தி

பஞ்ச பிரம்ம மூர்த்திகளான பஞ்ச தேவர்கள் கலியின் ஆதிக்க அடிமைகளாய் கோரமான குணக்கூறு அடைந்திருந்தனர். இந்தத் துஷ்ட தெய்வங்களை சுத்த வீர தெய்வங்களாய் பிறவி செய்த புராணப் பகுதியாக விளங்கும் இந்நூல், பஞ்ச பிரம்மங்களின் சக்தி நிலைகள் (பஞ்ச பூதம் – பூதப் பூதியம்) சுத்தப் பிறவிகளில் திரிபு அடைவதைக் குறித்து விவரிக்கிறது. இது பிரபஞ்ச திரிபுகள் குறித்த புனர் நிலைக்கு முக்கியச் சான்றாக விளங்குகிறது.