உயிர்களை வாழ வைத்து வாழும் முறைகளுக்கான இயற்கை அமைப்பினை அகிலம் நீதம் என்று கூறுகிறது.
நீதம் என்பது நியதி, நீதி, நெறி, சட்டம், தீர்வை என்ற அங்கங்கள் உடையதாகும். அகிலம் மூன்று நீதங்களைக் குறித்தும், அதற்கு அடிப்படையான தர்ம நீதம் குறித்தும் விவரிக்கிறது.
நீதம் அதன் பஞ்ச அங்கங்களாக, தெய்வ நீதம் தானமாகிய ஆலயங்களிலும், இயற்கையாக விளங்கும் தெய்வ நீத தானத்தாராகவும், அரச நீதத் தானங்களான பொது அதிகார மையங்களிலும், மனு நீதத் தானமான குடும்பத்திலும் இடம் பெற்றுள்ளன.
இம்மும்மையின் வரம்புகளில் மானுடர்கள் சஞ்சரித்து வாழும் அலங்காரங்கள். அதனைக் கண்டு இயற்கை மகிழ்ந்து வளம் செய்யும் ஒய்யாரங்கள் கூடியது நீதம்.
இம்மூன்று மையங்களில் மானுடர்கள் தேர்ச்சி அடைவதை, வெவ்வேறு கடமைத் திறங்களாய் விவரிக்கப்படுகின்றன
குடும்பத்திலுள்ள சந்ததிகளையும், அதில் முதியவரையும் - இளையவரையும் வாழ்வித்துக் காப்பவரை ‘மனை அரசன்’ என்றும், பொதுவாக மானுடர் முதலான உயிர்களை வாழ்வித்துக் காப்பவரை ‘முடியரசன்’ என்றும், இவை இரண்டு நிலைக்கும் இயற்கையோடு ஊடுருவி நின்று வளம் செய்து வாழ்விக்கும் தெய்வங்களோடு அவர்வர்களையும் வாழ்வித்துக் காப்பவரை ‘மூர்த்திகள்’ என்ற கடமைப் பெயரிட்டுப் போற்றுகின்றனர்.
இதற்கு மத்தியமாக, இம்மூன்று மையத்தாருக்குரிய தர்மங்களை நிலைநாட்ட, திரு அவதார முறையிலும், ஆலய வழக்கிலும், தவ வழக்கிலும் தர்மங்களைப் பரிபாலிக்கும் தர்ம நீதத்தாரை, தவசிகள், சித்தர்கள், முனிவர்கள் என்றும் பொருள்பட பல பெயர்களில் போற்றுவதற்கு பொதுவாக குருபிரம்மம் என்று போற்றும் திருமுறைகள் எல்லாம் கூடியது நீதம் ஆகும். இதன் விளக்கங்கள் வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.