Swamithoppe, Tamil Nadu, India

பதிகள்

ஆகமப் பதிகள்

உலகில் மக்கள் பரபிரம்மத்தை வழிபடுவதற்கு வகுக்கப்பட்டுள்ள ஆலயங்கள் அனைத்துக்கும் பொருந்தும் பொது விதியுடையதாக அய்யா வைகுண்டர் வழங்கிய ஆகமப் பதிகளின் சாஸ்திர நிலைகள் உள்ளன.

இவை உயிர்களின் பிராண மையத்தில் குவியும் திருவருள் மயம் மிக்கதாய் விளங்குகின்றன.

கோவில் - கால் - சிவாலயம் என்ற முத்திரிபுகள் உடையச் சாஸ்திர அங்கங்களோடு இவை விளங்குகின்றன.

பிரபஞ்சத்தில் ஆன்மா மையத்துக்கான சக்திப் பிரிவுகளைப் பிராண மையத்தில் குவிப்பதும், அப்பிராண மையத்தில் இருந்து சிவாலயமாகிய உலகிலும், உயிர்களின் உடற்கூறிலும் சேமிக்கச் செய்யும் திருமுறை சுற்றினை நிகழ்த்தும் தள நிலையைக் கொண்டுள்ளது.

இச்சாஸ்திரத்தின் ஏக நிலையைத் தாங்கும் ஏழு பதிகளையும், அப்பதித்தலத்தில் நிகழ்ந்த அய்யாவின் அவதார இகனையாடல்கள் வாயிலாக ஓங்கும் திருவருள் சேமங்களின் அருவூலங்களாக அவை விளங்குகின்றன.
இவை அகிலம் கூறும் ஆகமப் பதிகள் ஆகும்.

அவை: திருச்சம்பதி – சுவாமிதோப்பு பதி – வாழைநற்பதி – முட்டப்பதி – தாமரைகுளம் பதி – ஆம்பலப்பதி – பூப்பதி என்பன.

இப்பதிகளில் வணங்கும் மங்களத் தவமுறைகளை விளக்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.

1. திருச்சம்பதி

திருச்செந்தூர் பதி உலகில் அமைந்த முதல் அருளாட்சித் தலமாகும். இது கிரேதா யுகத்தில் அமையப்பெற்றது. இத்தலத்தின் அருகாமையில் வைகுண்ட அவதார முகூர்த்தம் செய்ய வந்த நாராயணர், அவரோடு வந்திருந்த ஈசர் முதல் சங்கத்தார்கள் அமர்ந்திருந்த தலத்தில், அய்யாவின் அவதாரப் பதி எழுப்பப்பட்டுள்ளது. இப்பதி அமைந்துள்ள இடத்தில் இருந்து நாராயணர் விஸ்வரூப அவதாரம் ஏற்று தேவ சங்கத்தாருக்குத் தரிசனம் வழங்கியதும், கடலுள் வளர்ந்திருந்த பொன் மகாலட்சுமியிடம் புறப்பாடு செய்ததும் நிகழ்ந்தேறியது.

பிறகு இத்தலத்தில் அய்யா வைகுண்டர் அவதாரத்தை நோக்கி, தேவ சங்கத்தார் அபயமிட்டதும், அய்யா வைகுண்டர் அவர்களுக்குத் தரிசனம் அளித்து, உபாய விவரங்கள் கூறியதும், அத்தருணம் பதினான்கு லோகத்தாரும் வைகுண்டரைத் தரிசித்துச் சேவைகள் செய்ததும், பிறகு ஆயிரத்தெட்டு அண்டத்தாருக்குத் தெய்வ நீதச் சட்டம் கூறியதும் நிகழ்ந்தேறியதற்குப் பிறகு, கலி அழிப்பதற்குரிய பம்மல் வியூகம் வகுத்து தெச்சணத்துக்குப் புறப்பாடானதுமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இவற்றைத் தழுவி அய்யா அவதாரப் பதியில் தர்மத் திருநாள் முறைகளும், அய்யா அவதார நாளில் மகரக்கடல் காணும் சேவையில் கடலை நோக்கிய திரு அபயம், பள்ளி எழுச்சி சேவைகள், திரு அபயச் சேவையும், தெச்சணத்துக்குப் புறப்படும் ஊர்வலச் சேவையும் மிகச் சிறப்பாக நடக்கின்றன.

2. சுவாமிதோப்பு பதி

தாமரை ஊர் பதி இயல்பாகவே அமைந்த பதித்தலமாக விளங்கியுள்ளது. அது மானுடர்கள் வணங்கும் தலமாக முன்பே விளங்கியது. இப்பதித்தலத்தில் வைகுண்ட அவதாரத்தை எதிர்நோக்கி போர்மேனி மாயன் மானுட சொரூபம் அடைந்து தவ வாழ்வை மேற்கொண்டிருந்தார். நாராயணர் கலியழிக்கும் திருவேஷம் ஏற்பதற்கு, போர்மேனி மாயன் மனுவைத் திருச்செந்தூர் கடலுள் வரவைத்து, அவரின் சொரூபத்தில் வைகுண்டர் மானுடச் சொரூபம் ஏற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சொரூபத்தோடு மனுக்கள் அறிய வைகுண்டர் முத்தவங்கள் செய்ததும், அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னன் படையை ஏவிப் பிடித்து சிறை வைத்த கலி சங்காரம் துவங்கியதும், பிறகு கலியை வென்று வந்து தேவ மனுக்களுக்குத் துவையல் தவசுக்கு அனுப்பி, அவர்களின் தவம் சார்ந்த பரீட்சைகள் பார்த்ததும், பிறகு மூன்றாவது விஞ்சை பெறுவதற்குப் பாற்கடலுக்குச் சென்று வந்ததும், இவ்விஞ்சைப்படி, "பத்தறையில் கோவில் கால் சிவாலயம்" என்ற சாஸ்திரப்படி ஆலயம் அமைத்து, அதில் அய்யா நித்தம் திருநாள் முதல் தேர்த்திருநாள் முறைகள் ஏற்றிருந்ததும், இத்திருநாள் முகூர்த்தங்களில் சப்த கன்னியருக்குத் திருக்கல்யாணச் சித்திகள் வழங்கியதும், அவர்களுடைய பாலரை அவர்களிடம் வழங்கியதும், பத்திரம் - சிவகாண்ட அதிகாரப்பத்திரம் - திங்கள் பதம் போன்ற திருமுறைகள் ஏற்றாடியதும், பிறகு அய்யா வைகுண்டர் வைகுண்டத்துக்குப் புறப்பாடு செய்ததுமான முக்கிய இகனையாடல் தலமாக தாமரையூர்ப் பதி (சுவாமித்தோப்பு) விளங்குகிறது. இத்தலத்துக்கு மணவைப்பதி, செம்பவள நற்பதி, ஆதித்தோப்பு, பொன்பதி போன்ற பெயர்களை அகிலம் கூறுகிறது.

3. வாவை நற்பதி

ஏழு உலக தேவ மானுடரின் குடிகள் அய்யா வைகுண்டரின் உத்தரவின்படி, கடலுள் உள்ள துவாரகை பதியின் வடக்கு வாசலை நோக்கி தவமிருந்த தலமாக வாவை நற்பதி விளங்குகிறது. இங்குள்ள கடல் தீர்த்தம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். இத்தீர்த்தத்தில் தவசிகள் குளித்து, குடித்து, பச்சரி – சிறு மணி சமைத்துத் தவம்புரிந்துள்ளனர். இதனால் இங்குள்ள கடல் தீர்த்தம் தனிச் சிறப்பு பெற்றுள்ளது. ஆதியில் மக்கள் ஆறு மாதங்கள் இத்தலத்தில் துவையல் தவம் அனுசரித்தனர். அத்தவசியரால் வணங்கும் தலமாக வாகைப்பதி உருவானது.

இத்தலத்தில் தவமேற்றிருந்த மக்களுக்கு நந்தீசர் போதித்த திருமொழிகளாக உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, வாழப்படிப்பு போன்ற பரம்பெரிய வேதத் திருமொழிகள் உருவான தலமாக இது விளங்குகிறது. மேலும், இப்பதியின் சிறப்பு நிலையாக, நான்கு வேதங்கள் என்று வர்ணிக்கப்படும், நான்கு வன்னி மரங்களைக் கொண்ட பதியாக இது விளங்குகிறது. அம்மரங்களின் மத்தியில் அய்யா எழுந்தருளும் திருமுறை தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.

4. அம்பலப்பதி

சுவாமித்தோப்பு பதியில் அமைத்தவாறு பத்தறையில் பதி அமைத்து திருவருளாடல் புரிந்த தலமாகும் இது. இங்கிருந்து லாடக்குருவாகத் திருச்சொரூபமேற்று, குமரி பகவதியின் திருவணைப்பதிக்குச் சென்று, பகவதியின் மதியை மயக்கி அம்பலப்பதிக்கு அம்பலப்பதிக்கு அழைத்து வந்தார். பிறகு பகவதியைப் பரசோதனை பார்த்து அவருக்குத் திருக்கல்யாணச் சித்தியை வழங்கினார். இவ்வாறு சரஸ்வதி தேவியான மண்டைக்காட்டாளை, மாயப்பெண் சொரூபத்தில் சென்று, அவளின் மதியை மயக்கி அழைத்து வந்தார். பிறகு பரசோதனை பார்த்து அவளுக்குத் திருக்கல்யாணச் சித்தியை வழங்கினார். இவ்வாறு பார்வதி, மகாலட்சுமி, வள்ளி, தெய்வானை போன்ற தேவியருக்கு திருவருள் ஞானக் கல்யாணச் சித்தி வழங்கிய தலம் அம்பலப்பதி ஆகும். இங்கு செவ்வாய்த் திருநாள் சிறப்புத் திருமுறையாக விளங்குகிறது.

5. பூப்பதி

பூமாதேவியின் அவதாரமான பூமடந்தைக்குத் திருக்கல்யாணச் சித்தி வழங்கியத் தலம் பூப்பதி ஆகும். இத்தேவி சூரங்குடி பண்ணையார் மகளாக அவதரித்திருந்தார். அய்யா தமது சீடர்களை அனுப்பி பெண் கேட்டார். பண்ணையார் மறுத்து சீடரை மிரட்டி அனுப்பிவிட்டார். அத்தருணம் பூமடந்தை தேவி சித்தம் கலங்கி அய்யா வைகுண்டர் இருந்த தலத்தை நோக்கி ஓடிய நிகழ்வால், குடும்பத்தார், ஊரார் கூடிப் பேசிப் பரிசமிட்டு, உலக வழக்கம் போன்ற ஆச்சாரத்தோடு பூமடந்தை தேவிக்குத் திருக்கல்யாணச் சித்தியை வழங்கும் திருஇகனையாடல் புரிந்தார். அது நிகழ்ந்த தலத்தில் பக்தரால் எழுப்பப்பட்ட பதித் தலமாக பூப்பதி விளங்குகிறது.