Swamithoppe, Tamil Nadu, India

வாழ்வியல்

வாழ்வியல்

துவாபர யுகத்தில், அரக்கர்களைப் படிப்படியாகத் தர்மத்தின் வழியில் அழித்ததால், தேவச் சாதிகளிடம் தர்ம மங்களம் தழைத்தோங்கியது. அதனைத் தழுவி, உலகில் உயிர்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த வாழ்வு சிறந்து விளங்கியது.

ரிஷிகள், சன்னியாசிகள் போன்ற தவசிகளும், மிருகங்கள், பறவைகள், ஊர்வனங்கள் என அனைத்தும் மானுடரோடு கூடி நாட்டில் சிறப்புற வாழ்ந்தன.

கலியுகம் தொடங்கியதும், கலி அரக்கனின் ஆதிக்கம் பெருகவே, தவசிகள் காடு, மலைக் குகைகளுக்குச் சென்று மறைந்தனர். நல்ல மன்னர்களோடு மானுடர்களும் மேலோகம் செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு மறைந்தனர்.

இவர்களோடு கூடி வாழ்ந்த நல்லினத்தைச் சேர்ந்த மிருகங்கள், பறவைகள், ஊர்வனங்கள் விதவிதமான தவ வாழ்வை மேற்கொண்டன. இவற்றுக்குச் ஸ்ரீரங்க நாராயணர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார் என்பதை உலகம் சுட்டிக்காட்டுகிறது.

கலியுகத்தில் நாராயணர் பல நாமங்களை எடுத்தாடினார். அவற்றில் ஸ்ரீரங்கர், ஸ்ரீ அனந்த பத்மநாபர், வாரிக்கரையாண்டி என்ற நாம வடிவங்கள் முக்கியமானவை. இவற்றின் அருளாட்சிகள் கலியுக அரக்கர் வாழ்வுக்கு அதிகபட்சமான வளத்தை அளித்தன.

திருவாரிக்கரையாண்டியாக திருச்சொந்தூரில் இருந்தபோது, பூமாதேவியோடும் தேவச் சங்கத்தாரின் அபயக் குரலைக் கேட்டும், அதே சமயம் உமையவள் வந்து கூறிய பிரபஞ்ச அபாயத்தை அறிந்தும், அவர் கயிலைக்குப் புறப்பட்டார்.

அன்று முதல் கலியுகத்தில் நல்லவர்கள் வாழ்வதற்கான திருவருள் முறைகளை வகுத்தருளியதன் நீட்சியில், பிரபஞ்சம் தாங்கும் ஏக அநேக தர்ம சக்தி வடிவங்கள் தோன்றிச் சிறக்கும் வைகுண்ட அவதார முகூர்த்தத்தை நிகழ்த்தியபின், அதனைச் சார்ந்து உலகில் அந்தத் தர்மத்தைத் தாங்கி மானுடர் வாழும் வழக்கத்தை வகுத்தார். அதில் அவரது பக்தர்கள் சிறப்புற்றார்கள்.

கலிபுருஷன் தவ மூலத்தை வரமாகப் பெற்றதிலிருந்து, தவசிகள் மானுடர்களிடையே வாழ இயலாத நிலை உருவானது. கலியைக் கடந்த முறையில், அய்யா தவமூலத்தை ஸ்தாபித்து, அந்தத் தவ நிறைவால் தர்ம சித்தி ஏற்பட்டது. கலியிடம் இழந்த தவங்களை முந்தைய தவத்தோர் மீண்டும் பெறுவதற்கும் மேலாக, மானுடர்கள் அனுசரிக்க வேண்டிய தவத்தையும், தவ ஒழுக்கங்களையும் வகுத்து வழங்கியதன் நீட்சியில், அந்தத் தவப்பயன் உலகியலில் நிலைபெற்று ஓங்குவதற்காக, உலகில் ‘இல்லறமே தவம்’ என்று எல்லோரும் கொண்டாடும் வகையில், வாழ்வியல் அறங்களை வகுத்தளித்து, அதையே அவர் அங்கீகரிக்கும் திருவருளாட்சியை வழங்கினார்.

அந்த அரிய நோக்கத்தை அடைந்தவராகச் சர்வ தெய்வ பக்தர்களும் திகழ்வதற்கு, இந்தத் தவ ஒழுக்கங்களை எல்லோருக்கும் பகர்ந்து வாழ்வதில் முன்னோடிகளாக அய்யா தமது பக்தர்களை வாழ வைத்தார்.

அய்யா வைகுண்டர் தனது துவையல் தவக்களத்தில், பக்தர்களுக்கு ஒரு வருட காலம் வழங்கிய பயிற்சி மூலம் அவர்கள் அடைந்த ஆன்மிகத் தேர்ச்சிகள் உலகில் உள்ள அனைவரும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவர்களை அவரவர் ஊர்களில் வாழ வைத்தார். அன்று முதல் துவங்கப்பட்ட தர்ம வாழ்வுக்கு வழங்கப்பட்ட முதன்மை நோக்கம், துவாபர யுகத்தின் கடைசிக் காலத்தில் உலகில் சிறந்திருந்த தர்மத்தின் சிறப்பினை மீண்டும் நிலைநாட்டுவதாக அமைந்தது. இந்த முதன்மை நோக்கத்தில் வெற்றி பெறும் வகையில், சாகா வாழ்வான தர்மயுக வாழ்வை அடைவதற்கான வழிகள் பக்தர்களுக்கு இயல்பாகச் சூழும் வகையில் அய்யாவின் உபதேசங்கள் இருந்தன. அய்யாவின் அருளாட்சி பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருப்பதால், இந்த உபதேசங்கள் எண்ணற்ற சக்தி அணிகளை அணுகி பலன் பெறும் வகையில் அமைந்துள்ளன.

உலகில் உயிர்கள் வாழும் வாழ்வுக்கு வளம் சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, குறிப்பாக ஆவினங்கள், ஆகியவற்றில் அய்யாவின் பக்தர்கள் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். பயிர்களின் செழுமையான விளைச்சலுக்கும், ஆவினங்களின் சிறந்த வாழ்வுக்கும் அய்யாவிடம் போதித்து வாழும் வழக்கம் இவர்களிடம் உள்ளது. மேலும், இவை சார்ந்த வர்த்தகம் மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்துத் தொழில்களையும் தொடங்கும்போதும், அய்யாவின் திருமுறைப்படி சுருக்கமான முறை மாப்பு மற்றும் உகப்படிப்பு சகித போதனைகளைச் செய்து துவங்குகின்றனர். இந்த உழைப்பின் பகுதிகளை நிறைவேற்றும்போதும் அவர்கள் அதே போதனைகளைப் பின்பற்றுகின்றனர்.

உழைப்பின் பலனில் ஒரு பங்கினை முதலில் பொது தர்மத்திற்காகப் பிரித்து வைக்கின்றனர். மீதமுள்ள பகுதியைக் குடும்பச் செலவுக்காகக் கருதி, உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்கும்போதும் அய்யாவிடம் அதைப் போதிக்கின்றனர். இந்தப் பொருட்களை சமைக்கும்போதும், சமைத்த உணவை உண்ணும்போதும் கூட அய்யாவிடம் போதித்து உண்கின்றனர். குறிப்பாக, மதிய உணவு உண்பதற்கு முன் உச்சிப்படிப்பு வேதம் ஓதுகின்றனர்.

ஓய்வு நேரங்களில், உலகின் முக்கால விதிகளை ஆராய உதவும் அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள்நூல் ஆகமங்களை வாசித்தும், கேட்டும் மகிழ்வதோடு, அதன் அடிப்படையில் ஆய்வுகளையும் மேற்கொள்கின்றனர். இந்த நூல்கள் நிகழ்காலத்தைக் கொண்டு எதிர்காலத்தைக் கணிப்பதற்கான வழி விளக்கங்களையும் கொண்டுள்ளன.

அய்யா போதித்தபடி, இவரது பக்தர்கள் குடும்பம், ஊர், தேசம், உலகம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் உயர்ந்த நோக்கத்துடன், அன்பு மற்றும் பொறுமை நிறைந்த பண்பலங்காரம் உடையவர்களாக விளங்குவதற்கு முயற்சி செய்கின்றனர். அடுக்கடுக்கான ஒருங்கிணைப்பை எதிர்நோக்கி வாழும் அய்யாவின் பக்தர்கள், அதற்கேற்ற கால மாற்றங்களை அறிய அய்யாவின் ஆகமங்களைத் தங்கள் அறிவுக்கண்ணுக்கான கண்ணாடியாகப் பயன்படுத்துவதை, தங்கள் கல்வி அறிவின் உச்ச நிலையாகக் கருதுகின்றனர். இந்த விளக்கங்களை வழங்கும் சேவையில் அகிலாலயா செயல்படுகிறது.