அய்யா வைகுண்டர், தனது அருளாட்சி நடைபெறும் பதிகள், ஆலயங்கள், மற்றும் சிவாலயங்களை வாழ்வியல் பாடங்களைப் பயிற்றுவிக்கும் தவ நெறிகளை போதிக்கும் "பள்ளிகள்" என்று குறிப்பிட்டார்.
இவற்றுக்கும் மேலாக, பரபிரம்மத்திற்கு முழுமையாகத் தீங்கு விளைவித்த கலி அரக்கனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு, வேத சாஸ்திர புராணங்களில் உள்ள புவ்வச் சக்கர முறை வரையிலான பூஜை முறைகளிலிருந்து அனைத்துப் பக்தர்களையும் விலக்கி, பரபிரம்ம இலக்கை நோக்கி வழிநடத்தும் நோக்கத்திற்காகவும், அவை பிரம்ம நெறிக்கு எவ்விதத் தீங்கும் இல்லாத தெய்வீகத் திருப்பதிகளாய் விளங்கச் செய்வதற்காகவும், பக்தி நெறியை விரும்பும் எவரும், விரும்பும் இடங்களில் பக்தி சுதந்திரத்துடன் பக்திப் பயிற்சியைத் தொடங்க அய்யா வைகுண்டரால் "தாங்கல்" என்ற அமைப்பு வழங்கப்பட்டது.
இத்தாங்கல் தலங்களில் பக்திப் பயிற்சி பெறுபவர்கள் ஒன்றிணைந்த இலக்கோடு விளங்குவதால், இவை "இணைத்தாங்கல்" என்று போற்றப்படுகின்றன. இவை பக்திக்கான சுதந்திரமான பயிற்சி மையங்களாகச் செயல்படுகின்றன.
கலியுகத்தில் பக்தியை வளர்ப்பதில் ஏற்பட்ட சுதந்திரமின்மையே இத்தகைய தாங்கல்கள் உருவாகக் காரணமாக அமைந்தது.
ஏழுலோக தேவர்கள் பூமியில் பிறவி எடுத்தபோது, அவர்களுக்கு அய்யா வைகுண்டர் விதவிதமான உபதேசங்களைச் செய்திருந்தார். அவை பூமியில் தேவர்கள் சாகா வாழ்வை அடைவதற்குரிய அரிய உபதேசங்களை உள்ளடக்கியிருந்தன. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக, கலி நீச ஆதிக்கத்தால், பிரபஞ்சத்தின் அரிப்பொருளான நாராயணரின் அவதார நாமங்களையும், சீவ மூலவரான சிவனின் நாமங்களையும், சக்தி மூலமான உமையவளின் நாமங்களையும் உச்சரிக்கக் கூடாது என்று கொடுமை உருவாகும் நிலை இருந்தது. இந்த நாமங்களை உச்சரிக்காத வாழ்க்கை வழக்கத்தால் தேவர்களுக்கும் சாவுகள் ஏற்படும். அவ்வாறு சாகும் பிறவியின் நீட்சியில் இருந்து தேவ மானுடர்கள் சுயமாக விடுதலை பெறுவதற்கும், பரபிரம்மத்தில் இருந்து தோன்றிய ஆதி தவ மூலச் சொரூபங்களான நாராயணர், சிவம், பிரம்மா மற்றும் அவர்களின் தேவியரை, பூமியில் வெளிப்படுத்திய பரபிரம்ம வைகுண்டரின் வாயிலாக வணங்கும் தவத்தை வளர்த்து, சாகா வாழ்வுக்குரிய பிறவித் தேர்ச்சி அடையும் பயிற்சி மையங்களாக தாங்கல்கள் விளங்குகின்றன.
இத்தாங்கல்கள் அய்யா வைகுண்டரின் பத்தறை சாஸ்திர முறைப்படி அமைந்த கோவில், சிவாலயங்கள் ஒருங்கிணைவதற்கும், புதிதாகத் தோன்றுவதற்கும் மையங்களாக விளங்குகின்றன என்பது தனிச் சிறப்பு. இதன் விளக்கங்களை வழங்கும் சேவையில் அகிலாலயா செயல்படுகிறது.