Swamithoppe, Tamil Nadu, India

துவையல்

Divider பரபிரம்மத்தை அணுகுவதற்குரிய திருமுறைகளோடு, அப்பிரம்மம் உயிர்களிடம் ஊடுருவிப் பிரகாசிப்பதற்குரிய பயிற்சிகள் அனைத்தும் துவையல் என்று கூறப்படுகின்றன. சுத்த வெண்மையான அன்புணர்வை மேலோங்கச் செய்யும் பரபிரம்மம், அதில் அடைத்தும் பூரணித்திருக்கும் மேல்நோக்கத்தை அய்யா வைகுண்டர் பொதுவாக்கியுள்ளார். இதற்குரிய தவத்திருமுறையாகத் துவையல் தவசு விளங்குகிறது. இத்தவசுவில் முதலில் ஏழு உலக தேவ மானுடர்கள் பங்கேற்றனர். அவர்கள் முழு குடும்ப அங்கத்தினரோடு செய்த தவத்திலிருந்து உலகியல் தவத்துக்கான திருமுறைகள் வெளிச்சமாகின. இவ்வாறே அய்யா பக்தர்கள் தற்போதும் கடைப்பிடிக்கின்றனர். நினைவு, சொல், செயல் இவற்றோடு முழுமையான வாழ்வியல் சுத்தம் குறித்து வலியுறுத்தும் இத்தவசு, மூன்று நீத ஆளுமைகளில் மிளிர வேண்டிய நேர்மை நெறிகளை நிலைக்கச் செய்வதற்கான நியமங்கள் உடையது. இவை சுத்தமான குடும்ப வாழ்வுத் திறம், அரசுக் கடமைக்கானத் திறம், தெய்வக் கடமைத் திறம் அடைவதில், பொதுநலம் ஓங்கும் என்பதை இத்தவ முறைகள் எடுத்துரைக்கின்றன. அநேக சுத்திகளை வலியுறுத்தும் இத்தவம் பிறவிச் சுத்திக்குரிய முக்கிய இலக்குகளை விளக்குகின்றன. அவை பிறவி நாசங்களுக்குரிய தோஷங்களை நீங்குவதற்குரிய பயிற்சிகளாக விளங்குகின்றன. அறிவு சுத்திக்காக ஒருபுத்தி எனும் பிரம்ம ஒருங்கிணைவினை வலியுறுத்தும் இத்தவசு அதற்கான சித்தியை, பிரபஞ்சத்தில் அனைத்தையும் சுத்தமாகக் கண்டு நிறையும் அளவுக்கு வாய்க்கச் செய்கின்றது. மேலும் சுத்தமான அறிவோட்டத்தை அடைய "வாசு நினைவு" என்ற யோகத்தின் வாயிலாகப் பெறுவதற்குரிய பயிற்சிகள் குறித்தும் கூறுகின்றது. பிராணனைப் பற்றித் துவங்கும் இந்த யோகமானது நமது ஜீவன் எடுத்துள்ளப் பிறவிகள் விவரிக்கும் நீட்சியில் பிரபஞ்சத்தின் உற்பத்தி மூலமான ஆதிப் பிரணவத்தைக் குறித்த தெளிவினை வழங்குகின்றது. இதனால் பிரபஞ்ச வாழ்வில் முக்தி வாழ்வு எத்தகையது என்பதை அறியும் ஞானம் இத்தவசிகளுக்கு இயல்பாக வாய்க்கின்றது. இதன் விளக்கங்களை வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.