எதிர்பார்ப்புக்கு இசையாத செயல்கள் அனைத்தும் தர்மம் ஆகின்றன.
எதிர்பார்ப்புக்கு இசையாத செயல்கள் அனைத்தும் தர்மம் ஆகின்றன. பிரபஞ்சத்தில் எதிர்பாராமல் சக்தியை வழங்கும் பொருளாகப் பரபிரம்மமே விளங்குகிறார்.
அவ்வாறு மானுடர்கள் வாழ்வில் தர்மங்களைக் கடைப்பிடிக்கும் அளவில் பிரம்ம சக்தியோடு அவர்கள் நிரந்தரம் அடைகின்றனர். பிரபஞ்ச தர்மம் ஏக நிலையில் இருந்து, ஆறு காலமாக அதன் அங்கங்களை வெளிப்படுத்தியது.
அதனை மும்மூர்த்தியர் – தேவியரின் அநேக அவதார தர்மங்களாய் அறியப்பெறுகின்றன. இவர்களின் திருமுறைச் சாயலில் அறியப்படும் தர்மங்கள் யுகங்கள் தோறும் வேறுதிரிந்து விளங்கியுள்ளன.
அந்த ஆறு காலத் தர்மங்கள் ஒருங்கிணைந்து விளங்கும் தர்மச் சக்கரம் அய்யா வைகுண்டரின் அவதாரம் வாயிலாக வெளிச்சமாகியது.
அய்யாவின் திருமுறையில் தர்மம் கலி அரக்க சங்காரத்துக்கும், அரக்கரால் நசுக்கப்பட்டுத் தாழ்மையடைந்து போனவரைத் தற்காத்து மேன்மையுறச் செய்யும் விகடச் சேவைத் திறமுடையதாக விளங்குகிறது.
விகடத்துவமாக விளங்கும் தர்மத் திருவருள் பிரபஞ்ச தர்மத்தின் கற்பினைக் காக்கும் உயர்ந்த நோக்கத்துக்குரிய பாதையில் உயிர்களை நடத்துகிறது.
இதனால் கலியுகக் கொடுமைகளால், நல்லினங்கள் இழந்த ஒழுக்கங்கள் எல்லாம் புனர்த் தேர்ச்சி அடைகின்றன.
இதனால் உலக வாழ்வு மிகவும் ஆச்சார அலங்காரம் உடையதாக ஏற்றம் பெறுகிறது. ஒழுக்க நெறியில் தேர்ந்து அய்யா நாராயணரின் நாமங்களைச் சொல்லி, யாசகம் பெற்று வாழும் மானுடரின் வாழ்க்கை தடத்தின் வாயிலாகப் பரத்தார்கள் உலகில் வந்து மகிழ்ந்து, மகிழ்வித்து வாழும் நீட்சியான பலன்களைப் பூமியில் ஸ்திரமாக்கிடும் இலக்கில் அய்யாவின் தர்ம சேம விளைவுகள் உள்ளன.
இதன் விளக்கங்கள் வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.