Swamithoppe, Tamil Nadu, India

அய்யா வைகுண்டர்

சுத்த பரபிரம்மத்தின் அம்சமானவர் அய்யா வைகுண்டர். கலி அரக்கனின் அழிக்கும் ஆதிக்கத்தால் பிரபஞ்சம் அனைத்தும் பிரம்ம சம்பந்தம் இழந்தது. இதனால் பிரபஞ்ச இனங்கள் அழியும் அபாயம் நெருங்கியதால், அதனைத் தாங்குவதற்கு, நாராயணர் - மகாலட்சுமி விஸ்வரூப அவதாரங்கள் புரிந்து, பரபிரம்மத்தில் இருந்து அதற்கு நிகரான பிரம்ம சத்தின் ரூபத்தைப் பூமிக்கு இறக்கி, அந்த சக்தியைத் தங்கள் விஸ்வரூபம் வாயிலாக அநேகமாக்கி, அவற்றுக்கு எல்லாம் ஏகமான பரபிரம்ம மூலத்தைப் பாலன் வடிவாக்கினார்.

ஆகையால் வைகுண்டர் எப்போதும் பாலனாகவும், இவ்வடிவத்தில் அநேகமடையும் பாலப் பிரம்ம மூலமாகவே விளங்குவார். இவரின் பாலன் வடிவங்களை முன் மூலமாகக் கொண்டு பிரபஞ்சம் அனைத்தும் கலியைக் கடந்து இலங்கும் என்பதற்குச் சான்றாக மூர்த்தியர் – தேவியர் புனர் தோற்றம் அடைந்ததை அகிலத்திரட்டு அம்மானை ஆகமம் கூறுகிறது.

அகிலத்திரட்டு

பிரபஞ்சத்தின் முத்திரிபுகள் குறித்து விவரிக்கும் அகிலத்திரட்டு அம்மானை, அதனால் முக்காலம் கூறும் ஆகமமாக விளங்குகிறது. இந்நூல் பல்வேறு காலங்களில் ஆறு முறை கூறப்பட்டதாகும். அவை பிறவிச் சுற்றுகள் ஆறு முறை நிகழ்ந்த விவரங்களை அகிலம் கூறுகிறது. அதில் ஆறு முகாந்தரங்கள் இருந்தன. அவை: பால வியாசர் முகம்; சரஸ்வதி தேவி முகம்; ஆதி வியாசப் பெருமான்; திருக்கயிலை முனிவர் முகம்; வேதப் பிரம்மா முகம்; விஸ்வ நாராயணர் முகம் என்பன.

அய்யா வைகுண்டர்
விஸ்வ நாராயணர்

விஸ்வ நாராயணர் முகம்

அய்யா வைகுண்டர் தெச்சணத்தில் பள்ளிகொள்கிறார். அம்மூலந்தழுவி மானுட நிறத்துடன் இருந்து முத்தவம் நிறைவேற்றுவதற்கிடையே கலி சங்காரம் நிகழ்ந்தேறியது. பிறகு பக்தர்களுக்கு வழங்கிய துவையல் தவமும், அய்யாவின் முத்தவமும் நிறைவேறிய பிறகு விஸ்வ நாராயணர், ஈசர் - உமை, பிரம்மா - சரஸ்வதி - ஆனைமுகனோடு தேவ சங்கத்தார்கள் வந்து, ஆதிக்கலி அரக்கன் உயிர் அழிந்து நரகத்துக்குச் சென்ற செய்தியைக் கூறி, வைகுண்டரை பாற்கடலுள் அழைத்துச் சென்று மங்கள விஞ்சை வழங்கினார்கள். இம்மங்கள விஞ்சைப்படி அய்யா வைகுண்டர் நித்தம் திருநாள் - வாரத்திருநாள் - மாதத்திருநாள், ஆண்டு திருநாள் என தேவர் திருநாட்களை ஏற்றருளத் துவங்கினார். இதன் நீட்சியில் சிவஞான முக்தி முகூர்த்தம் புரிவதற்காக, விஸ்வ நாராயணர் திருக்கயிலையில் எழுந்தருளியிருந்தார். அங்கு மகா சபைக் கூடியது. அந்த சபையில் மாயா பிரபஞ்சம் அறியாத பரமதிரு லட்சுமி நாராயணரைத் தரிசிக்க வந்திருந்தார். அச்சபையில் விஸ்வ நாராயணனிடம், "என்னைத் திருக்கல்யாணம் செய்து கோவரிக் குண்டக் குடியிருப்பில் இருத்திவிட்டு, எதிரி வந்துவிட்டான் என்று போனீர்களே, உங்களுக்கு எப்படி எதிரி வந்தான் என்று தாங்கள் அறியக் கூறுங்கள்" என்று பரமதிரு லட்சுமி கேட்டதற்கு பதிலுரையாக நாராயணர் கூறிய உரையை, பூமியில் அய்யாவின் சீடனாக விளங்கிய அரிகோபாலனை (சகாதேவன் சீடர்) வைகுண்டர் தமது ஆளுமைக்கு வயப்படுத்தி எழுத வைத்தார். இவ்வாறு அகில ஆகமம் ஆறாவது பிறவி அடைந்த ஏடு நடைமுறையில் உள்ளது. இந்த ஏட்டில் விவரிக்கப்பட்டுள்ளவை பிரபஞ்சத்துக்கு விதித்த கணக்காக விளங்குகிறது. அக்கணக்குகளில் முக்கியமாக ஒரு உயிரின் பரான்மா நிலை யாது? சீவான்மா நிலை யாது? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் சேவையில் அகிலாலயா உள்ளது.

தெச்சணம்

பிரபஞ்சம், அதன் லோகங்கள், அண்ட பிண்டங்கள், புவனங்கள், மண்டலங்கள் இவற்றின் தென்மேற்கு திக்கின் சுற்றுகள் கூடிய உற்பத்தி மூலத்தைத் தெச்சணம் என்று அகிலம் கூறுகிறது. அதற்கு இணங்க, பூமியின் பகுதியை முதல் சிவராஜியம் அமைந்த குமரிக்கண்டம் என்றும், அக்கண்டம் கடல் கொண்டதில் மிஞ்சிய தென்மேற்குப் பகுதியான குமரி மாவட்டம், அதனை ஆரம்பப் பகுதியாக்கொண்ட பாரத தேசத்தின் நிலப்பகுதியைக் குறிக்கிறது. பூமியின் உற்பத்தி மையமாக விளங்கும் பகுதியாக விளங்கும் தெச்சணத்தில், பெரும்புவி உற்பத்தி மூலமாகப் பரபிரம்மம் பள்ளிகொண்டு, பால வைகுண்டர் - நாராயண வைகுண்டம் – சதாசிவ வைகுண்டம் – பிரம்ம வைகுண்டம் என்று திரு அவதார திருவருளாடல்கள் புரிந்ததால், தெச்சணம் பிரபஞ்சத்தார்களின் வணங்கும் தலமாக விளங்குகிறது. இதன் விளக்கங்கள் வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.

தெச்சணம்