மாயா பிரபஞ்ச ஆதி காலமான நீடிய யுகத்தில், குறோணி என்ற அரக்க ஜீவி தோன்றியது. இந்த ஜீவி வாழ்ந்த முறையில் பிரபஞ்சம் மொத்தமும் அதனால் விழுங்கப்பட்டது. அது அமிர்தப் பிரபஞ்சத்தை ஒரு ஜீவி விழுங்கிய விபத்தாகக் காட்சியளித்தது. அந்த ஜீவியிடம் இருந்து பிரபஞ்சத்தை விடுவித்து வாழ்விக்க நாராயணர் மகாவிஷ்ணு சொரூபத்தோடு பூமியில் தவமிருந்தார். அத்தவ வீரியத்தால் "சுறோணித மாயன்" என்று விஸ்வ மயமாக அவதாரம் புரிந்து, குறோணியை ஆறு கூறுகளாகப் பிரித்து சங்காரம் செய்து ஆதிப் பிரபஞ்சத்தை மீண்டும் புனர்பித்தார். இந்தக் குறோணியின் பிண்டங்கள் ஆறினையும் பூமியில் ஆறு குழிகளில் புதையலாக்கியதோடு, நீடிய யுகம் என்ற பெருங்காலச் சுற்று நிகழ்வுகள் நிறைவடைந்தது.