குறோணியின் மூன்றாவது துண்டத்தின் பகுதியாக சூரபத்மன் - சிங்கமுகன் என்ற சூரர்களும், இருபால் சூரப்படைகளும் உலகில் தோன்றி வாழ்ந்தன. மேலும், ஈசனிடம் வரம்பெறுவதற்காக சூரர்கள் ஓமம் வளர்த்து சிவனை நோக்கித் தவமிருந்தனர். பூமியின் உயிர்களின் முதல் யாகத் தவத்துக்கு வந்து அருள்புரிய சிவம் தாமதித்ததால், பொறுமை இழந்த சூரபத்மன் ஓமக் குண்டத்தில் குதித்து சாம்பலாகிப் போனான். பிறகு ஓமகுண்டத் தவத்தை சிங்கமுகச் சூரன் தொடர்ந்தான். அவன் தனது ஆயிரம் தலைகளை ஒன்றொன்றாகப் பறித்து ஓமகுண்டத்தில் வீசிய கோரத் தவ நிலையைக் கண்டு பொறுக்க இயலாத சிவனும் உமையும் சூரனுக்குப் பிரசன்னமாகி, இறந்துபோன சூரபத்மனை திருப்பிக் கொடுத்து, கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்தனர். அந்த வரத்தின் காரணமாக சிவனும் உமையும் கயிலையைத் துறந்து வைகுண்ட லோகத்தில் சென்றிருந்தனர்.
இழந்த கயிலையை அடைவதற்காக உமையவள் சாம்ப சதாசிவத்தை நோக்கி, சரவணப் பொய்கையில் நின்று தவம் செய்து முருகப்பெருமானை மகனாக அடைந்திருந்தார். கயிலையோடு ஆயிரத்தெட்டு அண்டங்களை சூரபத்மன் அடக்கியாண்ட முறையில், பார்த்தார்களைச் சிறைப்படுத்தி, துன்புறுத்தினான். பார்த்தார்களின் துயரங்களை மாற்றுவதற்காக உமையவள் கருதிய கருத்தின்படித் தோன்றியிருந்த முருகப்பெருமான் நாமத்தில் பண்டார வேசமாக நாராயணர் வேசமெடுத்து, சன்னியாசிகளைப் படைகளாக்கி, சூரபத்மனுக்கு நல்ல புத்தி கூறினார். அதை ஏற்காமல் போருக்கு வந்த சூரரை அழித்து கந்த மாயன் பார்த்தார்களைக் காத்து, கயிலையை மீட்டு சிவனுமையை மேலும் பிரபஞ்சம் ஆள வைத்தார்.
நற்புத்தி ஏற்காத சூரபத்மனை இரணியனாகப் பிறவி செய்து, இரணியன் சாகாத வாழ்வை தக்கவைக்கச் செய்த தவத்தால் அதற்கான வரங்களை பிரம்மாவிடம் பெற்று, எல்லோரும் தன்னையே பூஜித்து வணங்கி பக்தி செய்ய வேண்டும் என்று சட்டம் வைத்தான். அதற்கு முற்றிலும் எதிராக இரணியன் மகன் பிரகலாதன் ஹரிபக்தனாக விளங்கினான். மகனைக் கொன்று தனது சட்டத்தை உறுதியாக நிலைநாட்ட முயன்ற இரணியன், முடிவில் நரசிம்ம மாயனால் அழிக்கப்பட்டான். இவ்வாறு பிரபஞ்சத்தார்களின் பக்திச் சுதந்திரம் காத்த பிறகு, நாராயணர் பிரகலாதன் சந்ததியில் வந்த மாபலியை இந்திர லோக பதவி ஆசையை முறியடிக்க, வாமன மாயனாக அவதாரம் புரிந்து பார்த்தார்களைக் காத்த நிகழ்வோடு கிரேதா யுக கால நிகழ்வுகள் நிறைவேறின.