Swamithoppe, Tamil Nadu, India

துவாபர யுகம்

Divider
Shiva's Abode

குறோணியின் ஐந்தாவது துண்டத்தில் தோன்றிய உயிர்கள் வாழ்ந்த காலம் துவாபர யுக காலம் ஆகும். இதில் கம்சன், துரியோதனன் தலைமையிலான கௌரவர்களாகிய அரக்கர்கள் தோன்றி வாழ்ந்தனர். அவர்களின் குடும்பக் கிளையைச் சார்ந்தவர்களாகப் பாண்டவர்களும், ஆயர் குலத்தவராகப் பார்த்தாரும் தோன்றி வாழ்ந்தனர். கம்சன் கொடுமை பெருகியபோது, நாராயணர் ஸ்ரீ கிருஷ்ண மாயனாகத் தோன்றி அவனை அழித்துவிட்டு, கடலுள் துவாரகை இராஜ்ஜியம் அமைத்து சக்ரவர்த்தியாக விளங்கினார். இத்தருணம் குரு தேசத்தின் இளவரசர்களாகிய கௌரவர்களும் – பாண்டவர்களும் அத்தேசத்தைப் பிரித்து ஆட்சி செலுத்தி வந்தனர். வஞ்சனையால் பாண்டவர்களின் நாட்டை அபகரித்த கௌரவர்கள், பாண்டவர்களுக்கு வனவாச தண்டனையும் வழங்கிச் செய்த கொடுமை துவாபர யுகத்தின் உச்சமான அதர்மமாக விளங்கியது.

வனவாச காலம் முடிந்ததும், பாண்டவர்களுக்காக ஸ்ரீ கிருஷ்ணர் தூதுவனாகி கௌரவர்களைச் சந்தித்து பாண்டவர்களின் இராஜ்ஜியத்தைத் திருப்பிக் கொடுக்கக் கூறினார். தர்மத்துக்கு இணங்காத கௌரவர்களை அழிக்கும் பாரதப் போர்க்களத்தில் அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்து, ஸ்ரீ கிருஷ்ண மாயன் அரக்கர் கௌரவர்களை அழித்து பாண்டவர்களை வாழ வைத்தார். பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் தனது திருமேனியை தவத்தில் அமர்த்திவிட்டு, மேலும் வரும் அரக்கர்களை அழிக்க நாராயணர் சான்றோர் என்ற தனது வம்சப் பாலரை உருவாக்கி, பத்திரகாளியிடம் வளர்க்கக் கொடுத்துவிட்டு, ஸ்ரீரங்கத்தில் சென்று பள்ளிகொண்டார். பத்திரகாளி சான்றோரை வீரராக வளர்த்து, தக்கன் என்ற அரக்கனை அழித்து சக்ரவர்த்தினியாக உலகாண்டு இருந்தார். பிறகு தோன்றிய பல்வேறு அரக்கர்களை பத்திரகாளியின் படைகளாக விளங்கிய சான்றோர்கள் அழித்து, இவர்கள் தர்மத்தை நிலைநாட்டிய நீட்சியில் சக்ரவர்த்திகளாக வாழ்ந்திருந்த நிகழ்வோடு துவாபர யுக கால நிகழ்வுகள் நிறைவடைந்தன.