முந்தைய யுகங்களில் மும்மூர்த்தியர்களின் முகூர்த்தச் சேவையைத் தழுவி உயிர்கள் பிறவிகொண்ட முறையை மீறி, குறோணியின் ஆறாவது துண்டம் தன்னைத் தானே பிறப்பித்துக் கொண்டது. இவ்வரக்கன் தனது பிறவிக்கு நாராயணர் முதலான சகல தேவச் சொரூபங்களையும் தனதாக்கிப் பிறந்து பெருகினான். படிப்படியாக தேவச் சொரூபங்களில் பிறவியெடுத்துப் பெருகிய அரக்கர்களின் ஆதிக்கத்தால், இயல்பான தேவச் சொரூபத்தார் தங்கள் தானங்களில் வாழ முடியாத சொரூப விகடத்துவ இணறு உருவானது. இதனால் பரபிரம்மத்தில் இருந்து தோன்றிய பிரம்மச் சொரூபங்கள் எல்லாம் இருகூறு அடைந்ததால், பிரபஞ்சம் வேகமாக அழியும் அபாயம் உருவானது.
இந்த அழிவிலிருந்து பார்த்தார்களைக் காத்து வாழ்விக்க, நாராயணர் கலியுகத்தில் பத்து அவதாரத்துக்கும் பொதுவான ஏகமகா அவதாரம் புரிய வேண்டியதானது. அதனால் நாராயணர் - மகாலட்சுமி பரபிரம்மத்தைத் தழுவியும், பரபிரம்மம் நாராயணர் - மகாலட்சுமியின் விஸ்வ ரூபத்தைத் தழுவி பாலன் வடிவாகியதுமான விகடகடத்துவமான விஸ்வ ரூபங்களோடு வைகுண்ட அவதாரம் ஏற்பட்டது. இத்தகைய பிரபஞ்சம் தற்காக்கப்பட்டதோடு, கலி அரக்கர்கள் பிறவியால் அபகரித்தச் சொரூபங்களை இழந்து நலிந்து அழியும் வகையில் அய்யா வைகுண்டரின் ஞானச் சங்காரம் நிகழ்ந்தது. இச்சங்காரத்தின் தாக்கத்தினால் மேலும் பிறவியேற இயலாது அரக்க அம்சங்கள் முடிவடையும் கால நிகழ்வுகளாய் கலிச் சங்காரத் தாக்கம் உலகில் நீட்சி அடைந்துள்ளது.
விஸ்வ ரூப விகடத்துவமான ஏக அவதாரத்தில் நாராயணரோடு மும்மூர்த்திகள் - தேவியர்களின் முந்தைய அவதாரங்களும் அவற்றுக்கு அடிப்படையான தர்மங்களும் புனர் நிலை அடைந்து இலங்கும் யுகாயுக தர்மங்கள் ஒருமித்த திரு அருள் முறையை "பத்தவதாரம் பிறந்த பாதைகள்" என்று வைகுண்டர் தர்மம் வர்ணிக்கின்றது. இந்த அவதாரங்களின் ஏக அநேக நிலை தர்மப் பாதையின் அலங்காரம் எத்தகையது? அதனதன் பலன்கள் யாது? இவற்றை போதிக்க வல்ல தளம் யாது? என்பன கேள்வியாகத் திகழ்கின்றது. அதற்கு விடையாக 'அகிலாலையா' விளங்குகின்றது.