அகிலத்திரட்டு அம்மானை ஆகமம், திரேதா யுக கடைக்காலத்தில் பால வியாசரால் திருக்கயிலையில் முதலில் கூறப்பட்டது. பரராச மாமுனிவர் தவமிருந்து பெற்ற பாலனோடு திருக்கயிலை சபையில் வந்தார். அப்போது ஈசன் குழந்தையைப் பற்றி விசாரித்தார். ஈசனிடம்,"இக்குழந்தைக்கான தவம், அதனால் அறியப்பட்ட முகூர்த்தம், இம்முகூர்த்தத்தில் புணர்ச்சி நிகழ்ந்த புராணம், அப்போது கருவாகிப் பிறந்ததால் முகக்கமும் கணித்தல், மூதூணர் ஆகமங்கள் அமைந்துள்ள ஆசு - மதுரம் - வித்தாரம் - சித்திரம் என்ற சொல்முறைகளை ஆராய்ந்து கூறுதல், அதற்கு மேலான கல்லாதக் கல்வியான கலக்கியானம், அண்ட பிண்டத் தோற்றத்தோடு அவற்றை உள்ளடக்கிய உயிரினங்களின் உடல்கள் குறித்த அறிவுகள், பிரபஞ்ச உற்பத்தியின் ஏக மூலமான ஏகச் சுழிமுனை, யுகங்களின் துவக்கம் முடிவாகிய பூரணங்கள் எல்லாம் விவரிக்க வல்லவன்" என்று கூறினார். அதனால் வியந்த ஈசன், பிரபஞ்ச புராணத்தை ஈசன் - உமையின் முன்பிறப்பு பின்பிறப்புகள் வாயிலாக வகைப்படுத்திக் கூறுமாறு கேட்டார். அதற்காக பால வியாசர் கூறிய உரையை நந்தீசர் எழுத்தாக்கினார். இவ்வாறு அகில புராணம் முதல் பிறவி அடைந்தது.