சரஸ்வதி தேவி, வியாசப் பெருமான் கூறிய ஆகமங்களை ஆய்வுச் செய்து வைகுண்ட அவதார முகூர்த்த நிகழ்வுகளைக் கணித்துக்கொண்ட நாராயணர், திருக்கயிலையின் கிரிகோயில் பகுதியில் இருந்து பூலோகத்துக்குப் புறப்பாடு செய்தார். அவரோடு ஈசன் முதல் சங்கமானவர்கள் கூடி, திருச்செந்தூர் கடற்கரையில் வந்து கந்தன் வரவேற்பை ஏற்று கடற்கரையில் சங்கம் செய்தனர். அச்சங்கத்தார் மத்தியில் நாராயணர் விஸ்வரூப அவதாரம் அடைந்து, கடலுள் விஸ்வரூப உரு வளர்ந்திருந்த பொன் மகாலட்சுமியிடம் சென்றார். பிறகு விந்துவழி திருவருளாடல் வடிவில், அய்யா வைகுண்டர் அவதாரம் திருச்செந்தூர் கடலுள் ஏற்பட்டது. கடலில் பிறந்த வைகுண்டர் புறப்பட்டு திருச்செந்தூர் கடற்கரையில் எழுந்தருளியபோது, அவரின் விஸ்வரூப நிலையை ஆதிக்கயிலையில் இருந்த முனிவர்கள் தரிசித்தனர். அவரின் அவதார காரணப் பூரணங்களை ஆராய்ந்து முனிவர்கள் பிரபஞ்சம் தோன்றிய மூலம் தழுவிய ஆகமத்தை வகுத்தனர். அதனைக் கயிலைச் செகத்தூணில் பதித்தனர். இத்தருணம் அகில ஆகமம் நான்காவது பிறவி அடைந்தது.