நாராயணர் - மகாலட்சுமியின் பத்து அவதாரங்கள் – ஈசனின் – உமையவளின் ஏழு மகா அவதாரங்கள், பிரம்மா – சரஸ்வதியின் ஆயிரம் அவதாரங்கள், நான்கு வேதங்களின் ஏழு அவதாரங்கள், சந்திர சூரியரின் ஏழு அவதாரங்கள், இந்திரனின் மூன்று அவதாரங்கள் - இந்த ஏக அவதாரங்களைச் சார்ந்த எல்லாச் சூத்திரங்களும் அடங்கியது போர்மேனி ஆகும். இம்மேனி மூலத்தை பாய மாயக்கூடு – ஆறு தரம் (ஆறு யுகம்) நம்மை அகம் வைத்தச் சடம் – செவ்வு மகாவிஷ்ணு உருச் செய்த சடம் – ஆற சடலம் என்றெல்லாம் அகிலம் வர்ணிக்கிறது. அய்யா வைகுண்ட அவதாரத்தில் இச்சடாச்சர மூலம் முக்கிய இடம் வகிக்கிறது. ஸ்ரீகிருஷ்ண அவதார மேனியாக விளங்கிய இந்த சடாச்சரத்தை அவதார நிறைவில் மருதவா மலை உச்சியில் தவத்தில் அமர்த்திய கொலுவில் கலியின் உற்பத்தி வயப்படாமல் நாராயணர் மறைத்தலாக்கி வைத்திருந்தார். கலி அரக்கரை அழிக்க வேண்டிய தருணம் வந்ததும், இத்தவ மேனியை ஒரு மானுடக் குழந்தையாக்கி உலகில் தெச்சணத்தில் தாமரையூர் பதி தலத்தில் தவ வாழ்வில் அமர்த்தியிருந்தார். இந்த மனுவின் மேனியின் சூத்திரங்களை எல்லாம், கடலுள் வைத்துத் தனது நகலாக்கிக்கொண்டு பரபிரம்மம் பாலன் வடிவம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபஞ்சத்தைப் புனர்ப்பிக்க போர்மேனி பிறவி செய்ய முன்பே உபாயம் வகுத்த காலத்தில், பிரபஞ்சத்தின் நல்லினங்களின் உயிர் நிலைகளை எல்லாம் கலியில் இருந்து புனர்ப்பிக்க, சான்றோர் என்ற ஒரு கோத்திரத்தை நாராயணர் வகுத்திருந்தார்.