ஸ்ரீகிருஷ்ண அவதார மேனியை தவத்தில் அமர்த்திவிட்டு, நாராயணர் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொள்ளும் முன்பு, அரிகோண மலைப் பகுதியில் சஞ்சரித்தார். அப்போது அங்குள்ள அமிர்த வனப்பகுதியில் இருந்த அமிர்த கங்கையில் தீர்த்தமாடி, அமிர்தக் கங்கை நீரினைக் குடம் போல் திரட்டி, "சிவசிவா" என்று கயிலைக்குப் புறப்பாடாகி வந்த ஏழு தேவியரைக் கவனித்தார். முன்பு யோகமுனிவன், 'பூமியில் ஏழு உலகத்தவர்கள் பூமியில் மக்கள் பிதிராகி, அப்பிதிரில் தவமிருந்து தர்ம யுகம் ஆளுவார்' என்று சாபம் செய்திருந்தார். இத்தருணம் அதற்கான முதல் கட்ட அருளாடலைப் புரிவதற்குச் சித்தமாகி, நாராயணர் ஏழு தேவியரின் எதிரேச் சென்று, அவர்களின் மனதில் கலவரம் உருவாக்கினார். அதனால் கலங்காத தேவியர்கள் கயிலைக்குச் சென்றனர்.
மறுமுறை தேவியர்கள் தீர்த்தமாடுவதற்கு வரும் முன்பு, நாராயணர் ஏழு லோகத்துக்கும் சென்று அங்குச் சிறந்த ஏழு உயிர் மூலங்களை எடுத்து பிரம்மா – ஈசன் உபதேசம் பெற்று, தேவியர் வருகைக்காகக் காத்திருந்தார். அவர்கள் அமிர்த கங்கையில் நீராடியபோது குளிரை ஏவி விறைப்பை உருவாக்கி, வ்யூசு என்ற அக்கினி உருவில் இருந்து குளிரைப் போக்கிட அக்கினியை வளைந்த தேவியரின் கருவறையில் ஏழு உயிர்களையும் புகுத்தி மானுட உருவம் பெறச் செய்தார். உடனே ஏழுப் பாலரைப் பெற்ற தேவியர்கள் இந்த மாயம் அறியாமல் கலங்கி, பாலரைத் திரும்பிப் பார்க்காமல் வனத்தில் ஓடி அலைந்து வாடினார்கள்.
நாராயணர் பாலர்களை எடுத்து இந்திரன் பசுக்களை அழைத்து பாலுட்டி வளர்த்திருந்த காலம், உலகில் தக்கன் என்ற அரக்க ஆதியரால் அதர்மம் உச்சமாகியதை கவனித்த ஈசர், தக்கனை அழிக்க என்று தனது நெற்றிக்கண்ணில் இருந்து பிறப்பித்து, வட கயிலையில் வாழ்ந்திருந்த பத்திரமாகாளியை அழைத்து, அரக்கனை அழிக்க உத்தரவு செய்தார். ஈசன் உத்தரவினை ஏற்றுக்கொண்ட பத்திரகாளி படைக்கான பாலர்களைத் தருமாறு கேட்டார். அதற்கு நாராயணரை நோக்கித் தவம்புரிந்து அவர் பெற்றுள்ள ஏழு பாலர்களையும் ஏற்றுக்கொள்ளக் கூறினார். அதற்காகப் பத்திரமாகாளி கயிலையில் தவமிருந்தார்.
தாய்மை அடைந்த மாயத்தால் கயிலைக்குச் செல்லும் சக்தியை இழந்த ஏழு தேவியரும், 'எங்களைத் தாய்மை அடைய வைத்தவர் வந்து எங்களை மணம்புரிந்து, மக்களைத் தந்து, மக்கள் உலகாள வேண்டும்' என்று முண்ட வனத்தில் நின்று தவம்புரியத் துவங்கினார்கள். இதனை அறிந்த நாராயணர் ஏழு பாலரையும் எடுத்துக் கயிலைக்குச் சென்று தவத்திலிருந்த பத்திரகாளியிடம் பல உபதேசங்கள் கூறி, ஈசன் முன்நிலையில் பாலர்களை வளர்க்கக் கொடுத்தார். பாலரைப் பெற்று மகிழ்ந்த காளிதேவி பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டிச் சேனையூட்டித் தருமாறு கேட்டார். உடனே மூவர் – தேவியர் சங்கமெல்லாம் கயிலையில் கூடிப் பதினான்குப் பட்டப்பெயர்கள் வழங்கி, யாவரும் காப்பணிவித்துச் சிறப்பித்தனர்.
நாராயணரின் பாலரோடு பூமியில் புட்டாபுரத்தில் வந்து கோட்டையிட்ட பத்திரகாளி பாலர்களை வீரராக வளர்த்து, தக்கனை அழித்து, பாலருக்கு நிருபதி இராஜனுக்கு ஈசன் அருளால் மக்களாகப் பிறந்திருந்த இந்திர லோகக் கன்னியரை மணம்புரிய வைத்து உலகில் சான்றோர் சந்ததிகள் பெருகி வாழ வைத்தார். பாரதப் போருக்குப் பின் இருந்த தேவ சாதிகள் ஒருங்கிணைந்த தேவச் சான்றோர் பெருகி வாழ்ந்த முறையோடு, தர்மத்தைத் தழைத்தோங்கச் செய்து சக்ரவர்த்திகளாய் வாழ்ந்தனர். கலியுகம் தோன்றி கலி அரக்கர் தேவ சாதியை பிரித்தாண்ட முறையால் அநேக சாதிகளாய் விளங்கியப் பார்த்தார்களை மீண்டும் ஒருங்கினைத்து, கலியை அழிக்க சான்றோர் கோத்திரத்தில் மேல் ஏழு உலகத்தாரை நாராயணர் பிறவிச் செய்தார்.
கலியை அழிக்க அவதரித்த அய்யா வைகுண்டர் தேவ சாதிகள் பிறவியால் ஒருங்கிணைவதற்கு இரண்டு ஆண்டுகள் தவமிருந்தார். இவ்வாறு மேல் ஏழு உலகத்தாரின் கூட்டுக் கோத்திரராக சான்றோர் விளங்குகின்றனர். அய்யா வைகுண்டரின் அவதாரக் காலத்துக்குப் பிறகு ஒரு உயிர் சான்றோராகப் பிறவி அடைவதால், அது ஏழு யுகப் பிறவிப்பலனைப் பெறும் சிறப்பினை அடைகிறது. இச்சிறப்பு நாராயணர் பார்த்தார்களுக்குச் செய்யும் உதவியாக விளங்குகிறது. அவர்கள் ஏழு யுகப் பிறவிச் சொரூபங்களை வைகுண்டர் வாயிலாக அடைந்து பிறவி பூரணம் அடைகின்றனர். பார்த்தார்களுக்குப் பூலோகத்தில் சான்றோர் சாதியாகப் பிறந்து ஒருங்கிணைந்து வாழும் காலத்தை அகிலம் தர்மயுகம் என்று கூறுகிறது. இவைகுறித்த மேலான விளக்கங்கள் வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.