உயிர்களும் அவற்றின் உடற்கூறில் பொருந்திகின்ற பிரபஞ்சமும் கலியின் உற்பத்திச் சுற்றினைக் கடந்து, இயல்பான உற்பத்திச் சுற்றில் மேனி அடைவதிலிருந்து தர்மயுக காலம் ஆரம்பிக்கின்றது. அதற்கு முன் பிரபஞ்சம் தழுவிய பிரளயம் ஏற்படும். அதனால் ஏற்படும் தெளிவு நிலைக்குச் சான்றாக, அக்காலத்திலிருந்து உலகில் பிறவி எடுக்கும் உயிர்கள் சாகா வாழ்வுக்குரிய மேனியை அடைவர். அதற்கு இசைந்தவாறு பிரபஞ்ச அங்கங்கள் எல்லாம் நேர்ச்சீர் அடையும். உயிர்களில் விருட்சங்கள் – ஊர்வனங்கள் – பறவைகள் – மிருகங்கள் – நீர்வாழ்வனங்கள் இவற்றுடன் மானுடர்களும் புதிய உடற்கூறினை அடைவார்கள்.
இவற்றை ஆளும் கோட்டையும், பூலோகத்தின் இன்ப வளமெல்லாம் தம்மில்க்கொண்டு, கடலுள் இருக்கும் துவாரகா பதி வெளியே தெரிய வரும்படி பூகோளத் திரிபுகள் ஏற்படும். அப்பொன்பதியில், பரத்தில் பரனை முன் வைத்துப் பரபிரம்மம் எவ்வாறு ஆளுமைப் புரிந்தாரோ அவ்வாறு துவாரகைப்பதியில் அய்யா வைகுண்டரின் தலைமையில் சகல மூர்த்தியர் தேவியர் அடங்கப் பரத்தார்கள் ஆட்சிப் பணி ஏற்றிருப்பார்கள். இதனால் இகத்திலும் பரத்திலும் ஒருங்கிணைந்த சாகாத வாழ்வுக்கான தேர்ச்சிகள் எல்லாம் பூரணப்படும். இக்காலப் பலனோடு கூடும் முக்தி வாழ்வுகள் கால எல்லையற்றுத் திகழும் காலத்தை அகிலம் தர்மயுகம் என்கிறது. இதன் விளக்கங்கள் வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.